துருக்கியில் இருந்து பெருமளவிலான ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கமரூன் நாட்டின் கொடியுடன் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வைத்து சோமாலியக் கடற்கொள்ளையர்கள் அண்மையில் மறித்துக் கடத்தினர். கப்பலில் இருந்த மாலுமிகளையும் பிணைக் கைதிகளாகச் சிறைபிடித்த கொள்ளையர்கள், கப்பலைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்று ரகசிய இடத்திற்கு நகர்த்த முயன்றனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் சோமாலிய மற்றும் துருக்கியக் கடற்படையினர் உடனடியாக களத்தில் இறங்கி, கூட்டாகப் பிரம்மாண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.

​கடற்படையினரின் தீவிரச் சோதனையின் முடிவில், சோமாலியாவின் பண்ட்லெண்ட் (Puntland) மாகாணக் கடற்பகுதிக்கு அருகே அந்தச் சரக்குக் கப்பல் சென்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாகச் சோமாலிய மற்றும் துருக்கியக் கடற்படைப் பிரிவினர் கப்பலை நாலாபுறமும் சூழ்ந்து அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அப்போது பாதுகாப்பைப் பணியில் இருந்த கடற்படையினருக்கும், கப்பலைக் கடத்திய கடற்கொள்ளையர்களுக்கும் இடையே நடுக்கடலில் பயங்கரத் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் வெடித்தது.

​கடற்படையினர் நடத்திய இந்த மின்னல் வேக அதிரடித் தாக்குதலில், கப்பலைக் கடத்திய 14 சோமாலியக் கடற்கொள்ளையர்கள் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கப்பலைக் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த கடற்படையினர், அதில் பிணைக் கைதிகளாகச் சிக்கியிருந்த 6 இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 மாலுமிகளையும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாக மீட்டெடுத்தனர். நடுக்கடலில் நடைபெற்ற இந்த அதிரடி மீட்பு நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.