ஒரு சாமானிய மனிதனின் பார்வையில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) என்ற மூன்று எழுத்துக்கள் வெறும் பதவிகள் அல்ல; அவை சமூகத்தின் அதிகாரம், பாதுகாப்பு, மரியாதையின் உச்சகட்டக் குறியீடுகள். இந்தியாவின் மிகவும் கடினமான யுபிஎஸ்சி (UPSC) தேர்வை எழுதி, லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு தேவதையாக உலா வரும் இந்த அதிகாரப் பீடத்தை அடைய மனிதர்கள் தன் வாழ்நாளையே தியாகம் செய்கிறார்கள்.

ஆனால், அந்தப் பீடத்தில் அமர்ந்த பிறகு, “எனக்கு இந்த அதிகார வாழ்க்கை வேண்டாம்” என்று உதறித் தள்ளும் போக்கு சமீபகாலமாக அதிகரித்திருப்பது நாடு முழுவதும் ஒரு மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது.

கடந்த 14 மாதங்களில் மட்டும் 40 வயதிற்குட்பட்ட 7 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 30-ஆம் தேதி, உத்தரப் பிரதேச கேடரைச் சேர்ந்த 2013 பேட்ச் முதன்மை ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா மிட்டல் தனது 13 ஆண்டுகால அரசுப் பணியைத் துறப்பதாக அறிவித்துள்ளார்.

லண்டனில் பல மில்லியன் டாலர் சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்திய மண்ணிற்குச் சேவை செய்ய வந்தவர் திவ்யா மிட்டல். மிர்சாபூரின் லஹுரியாதா கிராமத்திற்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு குழாய் நன்னீர் கொண்டு வந்து மக்களின் தாகம் தீர்த்த ஒரு லட்சிய அதிகாரி, இன்று தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது “புதிய தலைமுறை அதிகாரிகள் ஏன் இந்த அமைப்பிலிருந்து வெளியேறுகிறார்கள்?” என்ற கேள்வியை உரக்கக் கேட்க வைத்திருக்கிறது.

எந்த மாநிலத்தில் அதிகபட்ச வெளியேற்றம்?

சமூக வலைதளங்களில் பேசப்படுவது போல ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும் இந்த வெளியேற்றம் நடக்கிறதா? நாடாளுமன்றம் மற்றும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் வேறு கதையைக் கூறுகின்றன.

அரசு அமைப்பில் எந்தவொரு குறிப்பிட்ட மாநிலத்திலிருந்தும் மொத்தமாக அதிகாரிகள் வெளியேறவில்லை. ஆனால், உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடக்கும் ராஜினாமாக்கள் ஊடக வெளிச்சத்தைப் பெறுவதால் தேசிய அளவில் பெரிதாகப் பேசப்படுகின்றன.

  • உத்தரப் பிரதேசம்: நாட்டிலேயே அதிகபட்சமாக 652 ஐஏஎஸ் பணியிடங்கள் கொண்ட மாநிலம். இங்குதான் திவ்யா மிட்டல் தனது 13 ஆண்டு காலப் பணிக்குப் பின் விலகியுள்ளார்.

  • பீகார்: இளம் ஐபிஎஸ் அதிகாரிகளான நூருல் ஹோடா மற்றும் காம்யா மிஸ்ரா ஆகியோர் சமீபத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

  • ஒடிசா: புவனேஷ்வரில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த 37 வயதான இளம் ஐபிஎஸ் அதிகாரி ஜக்மோகன் மீனா தனது பதவியைத் துறந்தார்.

  • இதர மாநிலங்கள்: மத்தியப் பிரதேசத்தின் அபிஷேக் திவாரி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தார்த் கௌஷல், உத்தரகாண்டின் லோகேஷ்வர் சிங் ஆகிய இளம் ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களது சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு வெளியேறியுள்ளனர்.

முட்கிரீடத்தைத் துறக்க வைக்கும் 3 முக்கியக் காரணங்கள்!

சமீபத்தில் விலகிய இந்த அதிகாரிகளின் வாழ்க்கைப் பாதையை ஆய்வு செய்தபோது, அவர்களை இந்த முடிவிற்குத் தள்ளிய மூன்று முக்கியக் காரணங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன:

1. அரசியல் லட்சியமும் சித்தாந்த நிலப்பாடும்: அதிகாரக் கட்டமைப்பிற்குள் இருந்து பணியாற்ற முடியாத சூழலில், நேரடியாக அரசியலில் இறங்க பலர் விரும்புகிறார்கள். பீகாரின் காம்யா மிஸ்ரா அரசியலை நோக்கி அடிஎடுத்து வைக்கிறார். அதேபோல, ‘வக்ஃப் வாரிய மசோதா’விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது சித்தாந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த நூருல் ஹோடா தன் ஐபிஎஸ் பதவியை உதறினார்.

2. பெருநிறுவனங்கள் மற்றும் சர்வதேசக் கதவுகள்: அரசுத் துறையை விடப் பல மடங்கு அதிகமான சம்பளம், அமைதியான தனிப்பட்ட வாழ்க்கை, உலகளாவிய தளங்கள் போன்றவை அதிகாரிகளை ஈர்க்கின்றன. மத்தியப் பிரதேசத்தின் அபிஷேக் திவாரி சைபர் பாதுகாப்புத் தொழிலிலும், ஆந்திராவின் சித்தார்த் கௌஷல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர்பதவியிலும் இணைந்துள்ளனர். உத்தரகாண்டின் லோகேஷ்வர் சிங் ஐக்கிய நாடுகள் சபையில் (UN) சர்வதேசப் பணியை ஏற்றுச் சென்றுள்ளார்.

3. தனிப்பட்ட விருப்பங்களும் புதிய தேடல்களும்: 10 முதல் 15 ஆண்டுகள் அரசு நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற பிறகு, தங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட இலக்குகளான எழுத்து, சமூகச் சேவைகளை நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்ட திவ்யா மிட்டலின் ராஜினாமாவும் இந்த சுயதேடலின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

உண்மையிலேயே பெருமளவில் வெளியேறுகிறார்களா? – தரவுகள் சொல்லும் உண்மை!

“ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக வெளியேறுகிறார்கள்” என்ற பிம்பம் சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்டாலும், புள்ளிவிவரங்கள் அதை முற்றிலும் மறுக்கின்றன.

  • அரிதான நிகழ்வு: கடந்த 30 ஆண்டுகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் ஆகிய மூன்று சிவில் சர்வீஸ்களிலும் சேர்த்து வெறும் 300 அதிகாரிகள் மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர் அல்லது விருப்ப ஓய்வு (VRS) பெற்றுள்ளனர். இது மொத்த அதிகாரிகளின் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவு!

  • ஐஆர்எஸ் (IRS) துறையில்தான் அதிக ராஜினாமாக்கள்: ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகளை விட, இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரிகளே அதிகளவில் வெளியேறுகிறார்கள். 2014 முதல் 2024 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விலகியுள்ளனர். காரணம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பிக்-4’ (Big-4) போன்ற சர்வதேசத் தணிக்கை நிறுவனங்களும், சட்டத் தீர்ப்பாயங்களும் இவர்களுக்கு அரசுச் சம்பளத்தை விட 3 முதல் 5 மடங்கு அதிகச் சம்பளத்தைக் அள்ளித் தருகின்றன.

பதவி விலகுவது அவ்வளவு எளிதா?

ஒரு அகில இந்திய சேவை அதிகாரி நினைத்தவுடன் வேலையை விட்டு விலகிவிட முடியாது. அது ஒரு நீண்ட சட்டப் போராட்டம்:

  1. மாநில அரசின் சரிபார்ப்பு: அதிகாரிக்கு எதிராகப் நிலுவைத் தொகைகளோ, ஊழல் வழக்குகளோ அல்லது விசாரணைகளோ இல்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

  2. மத்திய அமைச்சர்களின் ஒப்புதல்: ஐஏஎஸ் அதிகாரியின் ராஜினாமாவை பிரதமரும் (DoPT துறை அமைச்சர்), ஐபிஎஸ் அதிகாரியின் ராஜினாமாவை உள்துறை அமைச்சரும், ஐஎஃப்எஸ் (வனத்துறை) அதிகாரியின் ராஜினாமாவை சுற்றுச்சூழல் அமைச்சரும் தான் இறுதி செய்து ஒப்புக்கொள்ள வேண்டும். பொதுநலன் கருதி இதை ஒத்திவைக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

மேலும், பல ஐபிஎஸ் அதிகாரிகளின் ராஜினாமாக்கள் பணி விலகல்கள் அல்ல! பயிற்சியின் போது மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி, ஐஏஎஸ் பதவி கிடைத்தால், பழைய ஐபிஎஸ் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு ஐஏஎஸ்-இல் இணைவார்கள். ஒவ்வொரு பேட்சிலும் 15-20% ஐபிஎஸ் அதிகாரிகள் இப்படித் தங்கள் பதவியை உயர்த்திக் கொள்கிறார்கள்.

பழைய தலைமுறைக்கு அரசுப் பணி என்பது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு பிணைப்பாக இருந்தது. ஆனால், இந்த புதிய தலைமுறை அதிகாரிகளுக்குப் பதவி என்பது ஒரு சேவைக்கான தளம் மட்டுமே தவிர, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை அல்ல!

சிவப்பு விளக்கு காரும், அதிகாரக் கம்பீரமும் தரும் அந்தஸ்தை விட, தங்களின் சுயமரியாதை, தனிப்பட்ட கனவுகள், மற்றும் சுதந்திரமான வாழ்க்கையே முதன்மையானது என்று இந்த இளம் தலைமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது. அதிகாரத்தின் முட்கிரீடத்தை விட, மனசாட்சியின் அமைதியே மேலானது என்ற உணர்வுதான் இந்த ராஜினாமாக்களின் பின்னணியில் நிற்கும் ஆகப்பெரிய நிதர்சனம்!