பஞ்சாபில் 1.46 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக ஒப்பனைக் கலைஞரான மன்ஜீத் கவுர், தனது காதலன் மற்றும் அவனது கூட்டாளியால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, 54 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இறக்கும் போது அவர் ஏழு வார கர்ப்பிணியாக இருந்தார் என்பதும், அவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற மன்ஜீத் கவுர், கரார் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு மற்றொரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில்தான் கடந்த ஜூலை 3 அன்று, மன்ஜித்தை ஒரு மதுக்கடைக்கு அருகில் அழைத்த அந்த நபர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக ஒரு காரில் கடத்திச் சென்றுள்ளார்.

மொரிண்டா பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மன்ஜீத், அங்கு ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருளை ஊற்றி அவர்கள் தீ வைத்துள்ளனர். இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவரது தோழி ஒருவர், உடனடியாக மன்ஜி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

கடுமையான தீக்காயங்களுடன் ஆரம்பத்தில் மொரிண்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காகச் சண்டிகர் பிஜிஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 29 அன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக உள்ள சுபி மற்றும் பிண்டா ஆகிய இரு குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகிறது.

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் ஒப்பனை மற்றும் இசை தொடர்பான வீடியோக்களைப் பதிவிட்டுப் புகழ்பெற்ற ஒரு பெண், தனக்கு அறிமுகமானவர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.