திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொல்லம்பட்டி பிரிவு பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த தனுஸ்ரீ (5), மோசீகிரண்(6), அன்யா (6), மற்றும் யோக வர்ஷினி (11) ஆகிய நான்கு சிறார்கள் வழக்கம்போல ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியதில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. வாகனம் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட மூன்று சிறுமிகளும், ஒரு சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் நிகழ்ந்த இந்தச் சோகச் சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் கடுமையான கொந்தளிப்பும் கண்ணீரும்கலந்த சூழலும் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அழுகுரல் காண்போரை நெங்கலங்க வைப்பதாக இருந்தது. தகவல் அறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய வாகனம் குறித்தும், அதன் ஓட்டுநர் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.