டெல்லியில் இருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய அலையன்ஸ் ஏர் விமானத்தின் இடதுபக்க டயர் திடீரென வெடித்துச் சிதறியதால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 41 பேரும் நொடிப்பொழுதில் மரண பயத்தைக் கண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

37 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் தரையிறங்கிய அந்தப் பயணிகள் விமானம், ஓடுதளத்தில் வந்துகொண்டிருந்தபோது தான் இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. தரையிறங்கும் அந்த முக்கியமான தருணத்தில் டயர் வெடித்ததால் விமானம் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

இருப்பினும், விமானியின் அசாத்திய திறமையாலும் சாமர்த்தியத்தாலும் பெரும் அசம்பாவிதம் மற்றும் பெரிய அளவிலான சேதம் ஏதுமின்றி விமானம் பாதுகாப்பாக ஓடுதளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. டயர் வெடித்த சத்தத்தைக் கேட்டு திகைத்துப்போன பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி மரண பீதியில் உறைந்துபோயினர்.

உடனடியாக விரைந்து வந்த விமான நிலைய மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள், பதற்றத்தில் இருந்த 41 பேரையும் பாதுகாப்பாக மீட்டு ஓடுதளத்தில் இருந்து முனையக் கட்டிடத்திற்கு அழைத்து வந்தனர். இதனால் பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த அவசரக் காரணத்தினால், பிலாஸ்பூரில் இருந்து அடுத்து புறப்பட வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டு, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்துத் தீவிர விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விமானத்தின் டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது ஓடுதளத்தின் தரைப்பகுதியில் ஏற்பட்ட ஏதேனும் சிக்கலா என்பது குறித்து ஏவியேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் வான்வழியாகப் பத்திரமாகப் பயணித்து வந்து தரையிறங்கும் போது நூலிழையில் மாபெரும் ஆபத்திலிருந்து தப்பிய இந்தக் சம்பவம், விமானப் பயணிகள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் நிம்மதியையும் அதேசமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.