மகாராஷ்டிர மாநிலத்தில் லஞ்சப் புகார் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரி ஒருவரை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சூழ்ந்துகொண்டு, காலாவதியான பிஸ்கட்டுகளை அவரைய உண்ண வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்க அந்த அதிகாரி லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் அவரை மடக்கிப் பிடித்து இந்தக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
கடையொன்றில் காலாவதியான பிஸ்கட் பொட்டலங்கள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அந்த FDA அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்காமல், லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு கொதித்தெழுந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள், அந்த அதிகாரியைச் சுற்றி வளைத்துத் தீவிரமாக கேள்வி எழுப்பினர். “மக்களுக்கு விற்க அனுமதிக்கும் இந்த காலாவதியான பிஸ்கட்டை முதலில் நீங்களே சாப்பிட்டுப் பாருங்கள்” என்று கோபத்துடன் கூறி, அந்த பிஸ்கட்டுகளை அவரது வாயிலேயே வலுக்கட்டாயமாக திணித்து உண்ண வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு அதிகாரிகளின் லஞ்ச லாவண்யம் மற்றும் கடமைத் தவறும் போக்கிற்கு எதிராக மக்கள் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரியே லஞ்சத்திற்காக மக்களின் உயிரோடு விளையாட முயன்றதும், அதற்கு மக்கள் அளித்த இந்த வினோத தண்டனையும் அரசுத் துறைகளில் நிலவும் லஞ்சக் கலாச்சாரத்திற்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாக மாறியுள்ளது.
