பச்சைப் பயறு பருப்பு ஆரோக்கியமான உணவு என்றாலும், அதன் சுவை பிடிக்கவில்லை என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் அதையே கொஞ்சம் வித்தியாசமான முறையில் சமைத்தால் சுவையான மதிய உணவாக மாற்றலாம். முகலாய பாணியில் தயாரிக்கப்படும் ஷாஹி பச்சைப் பயறு பருப்பு, நறுமணமிக்க மசாலாக்கள், தயிர் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து தயாரிக்கப்படுவதால் வழக்கமான பருப்பைவிட வித்தியாசமான சுவையைத் தருகிறது.

இந்த பருப்பைத் தயாரிக்க முதலில் ஒரு கப் முழு பச்சைப் பயறை நன்றாகக் கழுவி, சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஏலக்காய், பெரிய ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒரு சிறிய துணியில் கட்டி, ஊறவைத்த பருப்புடன் குக்கரில் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பருப்பு நன்றாக வேகும் வரை சமைக்கலாம்.

அடுத்ததாக கடாயில் நெய் மற்றும் சீரகம் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலாவை நன்றாக வதக்கிய பிறகு, அடித்த தயிரை சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரியும் வரை சமைப்பது முக்கியம்.

இறுதியாக வேகவைத்த பச்சைப் பயறு பருப்பை இந்த மசாலா கலவையில் சேர்த்து நன்றாகக் கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பதத்தை சரிசெய்யலாம். பின்னர் பிரெஷ் கிரீம், வறுத்த கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் முகலாய பாணி ஷாஹி பச்சைப் பயறு பருப்பு தயார். இதை சாதம், சீரக சாதம், நான் அல்லது ரொட்டி ஆகியவற்றுடன் பரிமாறலாம்