உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்திரா பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் படித்து வரும் பிஞ்சு குழந்தைகளைக் கொண்டு பள்ளி வளாகத்தில் ஈட்டுகளைச் சுமக்கச் செய்த அவலமான சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் இருக்க வேண்டிய பிஞ்சுச் சிறார்களைச் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போல மாற்றி, ஆபத்தான முறையில் பள்ளியின் பழுதடைந்த பகுதிக்கான பொருட்களைச் சுமக்க வைத்த இந்தச் செயல் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்தது.

இந்த விவகாரத்தின் தீவிரத்தைகைக் கையில் எடுத்த மாவட்ட அடிப்படை கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பள்ளி நேரத்தில் வகுப்பறைகளில் இருக்கும் மாணவர்களைக் கண்காணிக்கத் தவறியதுடன், அவர்களது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய சம்பந்தப்பட்ட பள்ளியின் பெண் தலைமை ஆசிரியரான மாண்ட்வி குமாரி என்பவரிடம் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இதற்குத் தலைமை ஆசிரியர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கம் எள்ளளவும் திருப்திகரமாக இல்லாத காரணத்தினால், மாவட்ட கல்வி அதிகாரி முகுல் ஆனந்த் பாண்டே அதிரடியான நடவடிக்கையில் இறங்கினார். இதன் ஒரு பகுதியாக, அந்தத் தலைமை ஆசிரியரின் ஓராண்டுக்கான ஊதிய உயர்வை உடனடியாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன, இனிவரும் காலங்களில் பள்ளி வளாகத்தில் இது போன்ற மனிதநேயமற்ற சம்பவங்கள் சற்றும் அரங்கேறக் கூடாது என்று கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.