கைலாச மானசரோவர் யாத்திரைக்காகச் சென்ற மும்பையைச் சேர்ந்த சஞ்சய் பாட்டீல், நளினி பாட்டீல் தம்பதியினர் உட்பட 31 யாத்ரீகர்கள், நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கிற்குப் பின் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்திலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று காத்மாண்டு சென்றடைந்த இக்குழுவினர், பசுபதிநாத் மற்றும் சேஷஷாஹி விஷ்ணு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தனர். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் பயண விவரங்களைத் தொடர்ந்து குடும்பத்தினருக்கு அனுப்பி வந்தனர். அதன்பின்னர், ஆகஸ்ட் 25 அன்று பேருந்து மூலம் பயணத்தை மேற்கொண்டு திமுரே கிராமத்தை சென்றடைந்தனர்.
திமுரேயிலிருந்து சீன எல்லையில் உள்ள கெருங் வழியாக திபெத்திற்குள் நுழையத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ரிசுவகதியில் உள்ள சீன சுங்கப் பகுதியை அடைந்தபோது, பனிப்பாறை உருாகி திடீரெனப் பெருக்கெடுத்த வெள்ளம் அப்பகுதியைச் சூறையாடியது. சாலைகளும் தகவல் தொடர்பு கோபுரங்களும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.
ஆகஸ்ட் 26 காலை 8:30 மணிக்கு மேல் யாத்ரீகர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது வரை அவர்கள் எங்கு இருக்கிறார்கள், பாதுகாப்பாக உள்ளனரா என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் கிடைக்கவில்லை. இவர்களது உடைமைகள் காத்மாண்டு ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய மற்றும் சீன மீட்புக் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தானே மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் உட்படக் மொத்தம் 31 யாத்ரீகர்களை மீட்கக் குடும்பத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
