சீனாவில் வேலைக்கான இலக்கை நிறைவேற்றவில்லை என்பதற்காக பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் உடற்பயிற்சி தண்டனை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்சோவில் உள்ள கடன் உதவி நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணியாற்றிய யாங் என்ற பெண்ணுக்கு, தினசரி பணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றாததால் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாங் பணியில் சேர்ந்து சில வாரங்களிலேயே, தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது, புதிய வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வது உள்ளிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 28-ஆம் தேதி இரண்டு இலக்குகளை நிறைவேற்ற முடியாததால், ஒவ்வொரு தவறிய இலக்குக்கும் 50 யுவான் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது 100 முறை உட்கார்ந்து எழ வேண்டும் என மேலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணம் செலுத்த முடியாத நிலையில், யாங் மொத்தம் 200 முறை உட்கார்ந்து எழும் தண்டனையை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனையை முடித்த உடனேயே அவரால் சரியாக எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. இரு கால்களிலும் கடுமையான வலி ஏற்பட்டபோதிலும், உடனடியாக மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சுமார் ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது சிறுநீர் அடர் நிறமாக மாறியதை கவனித்த பின்னரே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனையில் அவருக்கு ‘ராப்டோமயோலிசிஸ்’ என்ற தீவிரமான தசைச் சிதைவு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சேதமடைந்த தசைகள் வேகமாக சிதைந்து, அவற்றிலிருந்து வெளியாகும் பொருட்கள் ரத்தத்தில் கலந்து சிறுநீரகங்களையும் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
யாங்கின் ரத்தத்தில் தசை சேதத்தை காட்டும் கிரியேட்டின் கைனேஸ் அளவு 16,000 யூனிட்டுக்கும் அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக அவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படவில்லை. உடல்நலப் பாதிப்பு காரணமாக ஜூலை 30-ஆம் தேதி அவர் வேலையை ராஜிநாமா செய்தார். பின்னர் மருத்துவச் செலவுகள் மற்றும் இழப்பீடு கோரி நிறுவனத்தை அணுகியதுடன், உள்ளூர் தொழிலாளர் ஆய்வு அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மேலாளர் தனது செயல் தொழிலாளர் விதிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
