சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியை விட்டுப் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்தப் பிரிவுக்குத் தான் காரணம் என்ற குற்றச்சாட்டிற்குத் திருநங்கை வைஷ்ணவி (வைஷு) கொந்தளிப்பான வீடியோ வடிவில் பதிலடி கொடுத்துள்ளார். ‘உன்னையும் திருநங்கை வைஷுவையும் இணைத்துப் பேசும்போது கூட உறுதியாக நின்ற உன் மனைவி, ஒரு சிறிய சண்டையால் பிரிந்துவிட்டார்; இதில் வைஷுவிடம் நான் தோற்றுவிட்டேன்’ என்று நாஞ்சில் விஜயன் உருக்கமாகப் பதிவிட்டிருந்த செய்தி, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.
நாஞ்சில் விஜயனின் இந்த குற்றச்சாட்டு குறித்து மனமுறுகிப் பேசியுள்ள வைஷு, “நான் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் போராடினேனே தவிர, எந்தக் காலத்திலும் உங்கள் குடும்பம் சிதைய வேண்டும் என்றோ, கணவன் – மனைவி பிரிய வேண்டும் என்றோ சாபம் இடவில்லை” என்று மிகத் தெளிவுபடுத்தியுள்ளார். தான் காவல் துறை ஆணையர் அலுவலகம் வரை சென்றது கூட, இழந்த தன் வாழ்க்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுப்பதற்காக அல்ல என்பதை அவர் கண்ணீருடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாஞ்சில் விஜயன் தனது சொந்தத் தவறுகளை மறைக்கவும், விளம்பர வெளிச்சத்தைத் தக்கவைக்கவும் மீண்டும் தன் மீதே பழியைப் போடுகிறார் என்று வைஷு குற்றம் சாட்டியுள்ளார். “நீங்கள் செய்த துரோகத்திற்குத் தான் கடவுள் ரூபத்தில் இப்போது பலன் கிடைத்துள்ளது; தயவுசெய்து இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ள வைஷு, தன் மீதான அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான காரணத்தை உணர்ந்து செயல்படுமாறு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
