தில்லியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் உளவு வலையமைப்பை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த இளம் தம்பதியரான முகமது சாஹில் மற்றும் அவரது மனைவி சமீரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தில்லி-என்சிஆர் பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தான் ஆதரவு உளவு வலையமைப்பு குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அதில் இந்திய சிம் அட்டைகளைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் தொடர்புகள் வெளிச்சத்துக்கு வந்தன.
போலீஸாரின் விசாரணையில், சாஹில் முதலில் இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மூலமாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி எனக் கூறப்படும் ஒருவருடன் இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில், சுமார் 8 இந்திய சிம் அட்டைகளை துபை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும், அதற்காக சுமார் ரூ.30,000 பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இந்த இந்திய எண்களைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்குகள் இயக்கப்பட்டதாகவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதன் மூலம் இந்திய வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து முக்கியமான தகவல்களைத் திரட்ட முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவக் குடியிருப்பு பகுதிகளை வேவு பார்ப்பதற்காக ஆட்களைத் தயார்படுத்தும் பணியும் சாஹிலுக்கு வழங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சாஹில் மற்றும் சமீரா ஆகியோரின் செல்லிடப்பேசிகளை சிறப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தடயவியல் ஆய்வு செய்ததில், பாகிஸ்தானில் உள்ளதாகக் கூறப்படும் உளவுத் தொடர்புகளுடன் சந்தேகத்துக்குரிய உரையாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் இருந்ததாக போலீஸார் கூறுகின்றனர். முதலில் சாஹில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது செல்லிடப்பேசி விசாரணையின் அடிப்படையில் கிடைத்த தகவல்களை வைத்து சமீராவையும் போலீஸார் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சிம் அட்டைகளைப் பெறுவதிலும் அவற்றை பாகிஸ்தானில் உள்ள தொடர்புகளிடம் சேர்ப்பதிலும் சமீராவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாஹில் கடந்த 2024-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பாகிஸ்தான் தொடர்புடைய நபருடன் அறிமுகமானதாகவும், பின்னர் அந்தத் தொடர்பு சமீரா வழியாகவும் விரிவடைந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரும் பின்னர் திருமணம் செய்துகொண்டதாகவும், அதன் பிறகு பாகிஸ்தானில் உள்ள தொடர்புகளுக்காக பணியாற்றத் தயார்படுத்தப்பட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இதற்காக பொருளாதார பலன்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வலையமைப்பில் மேலும் யார் யார் தொடர்பில் உள்ளனர், சிம் அட்டைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன, வேறு ஏதேனும் முக்கியத் தகவல்கள் பரிமாறப்பட்டனவா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தில்லியில் பாகிஸ்தான் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த உளவு வலையமைப்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
