வாட்ஸ்அப் செயலியில் “அரசு அல்லது பிரபல நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது” என்ற பெயரில் வேகமாகப் பரவி வரும் ஒரு போலி மெசேஜ், தற்போது ஏராளமான பயனர்களை அச்சுறுத்தும் மாபெரும் ஆன்லைன் மோசடியாக உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், மக்களின் தேவையை முதலீடாக வைத்து ஏமாற்றும் ஆன்லைன் சைபர் குற்றவாளிகள், இந்த இலவச லேப்டாப் ஆசையைக் காட்டி அப்பாவி மக்களின் தனிப்பட்டத் தரவுகளையும் பணத்தையும் திருடத் திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்ற மோசடி குறுஞ்செய்திகள் உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்தால், அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பிறருக்குப் பகிரக் கூடாது என்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த இலவச லேப்டாப் லிங்கை கிளிக் செய்தவுடன், அது பயனர்களை அரசு இணையதளம் போன்ற தோற்றமளிக்கும் ஒரு போலியான வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.

அங்குப் பயனர்களின் பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தனிப்பட்டத் தகவல்களைப் பூர்த்தி செய்யுமாறு கோரப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த சலுகையைப் பெற வேண்டுமென்றால் இந்த லிங்கை உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள 10 நபர்களுக்கோ அல்லது 5 குழுக்களுக்கோ பகிர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.

இதன் மூலம் அந்த மோசடிக் கும்பல், ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்களின் ஸ்மார்ட்போன்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைச் சுருட்டும் அபாயகரமான வேலையில் ஈடுபடுகிறது.

இணையத்தைப் பயன்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமே இதுபோன்ற மோசடிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும். எந்த ஒரு அரசுத் திட்டமாக இருந்தாலும், அது அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலமாக மட்டுமே முறைப்படி அறிவிக்கப்படும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற ஆசை வார்த்தைகள் நிறைந்த, சரிபார்க்கப்படாத லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி அல்லது தனிப்பட்ட விபரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.