நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ள நீரில் கரை ஒதுங்கும் சடலங்களில் இருந்து தங்க நகைகளை ஒரு கும்பல் திருடிச் செல்லும் மனதை உலுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை இழந்து மக்கள் தவித்து வரும் வேளையில், இந்த மனிதத்தன்மையற்ற செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஓடும் போட்டிகோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் நுவாகோட், தாடிங்க், ரசுவா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், கைலாய யாத்திரை சென்ற பயணிகள் மற்றும் நீர்மின் திட்டத் தொழிலாளர்கள் எனப் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கில் 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் 288 இந்தியர்களும் அடங்குவர். குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பல பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், மீட்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், வெள்ள நீரில் இறந்து கிடக்கும் பெண் ஒருவரின் முடியைப் பிடித்துக் கரைக்கு இழுத்து வரும் இருவர், அந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க நகைகளைக் கழற்றி எடுத்துச் செல்லும் கொடூரக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுற்றிலும் பலர் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
बाढीमा डुबेको … बाट सुन निकालेर हिडेको भिडियो अहिले भाइरल भैरहेको छ भने प्रहरीले भिडियोको बारेमा अनुसन्धान सुरु गरेको छ । यस विपदको समयमा मानवियता देखाइदिनु हुन विनम्र अनुरोध छ । उक्त सुन, चाँदीको आधारमा सनाखत हुने हुँदा शरिरबाट सुन, चाँदी लगायतका सामग्रीहरु ननिकालिदिनुहोला ।… pic.twitter.com/XhFDpcmNZq — Routine of Nepal banda (@RONBupdates) August 27, 2026 “>
இந்த வீடியோவைக் காணும் நெட்டிசன்கள் “இறந்த பெண்ணின் உடலை மீட்காமல் நகையை மட்டும் திருடிச் செல்வது என்ன மாதிரியான மனிதநேயம்?” எனக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாகக் கண்டறிந்து நேபாளக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
