ஒரு சாதாரண குடும்பச் சண்டை எத்தகைய கோர முடிவைத் தரும் என்பதற்கு ஜார்க்கண்டிலிருந்து வெளியாகி இருக்கும் இந்தச் செய்தி மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது ஜார்க்கண்ட் மாநிலம் லூபுங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவருடைய மனைவியின் பெயர் நிராலி தேவி. சம்பவத்தன்று, வீட்டிலிருந்த அழுகிய உருளைக்கிழங்குகளைக் குப்பையில் வீசுவது தொடர்பாக நிராலி தேவிக்கும், அவரது மாமியார் காந்தி தேவிவுக்கும் இடையே சிறு வாக்குவாதம் எழுந்துள்ளது.
அந்தச் சமயத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவன் ஆகாஷ் குமார், இந்தச் சாதாரணச் சண்டையைக் கண்டு மேலும் ஆவேசம் அடைந்துள்ளார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது 6 மாதக் கைக்குழந்தை ‘அன்ஷ்’ மீது கோபத்தைத் திருப்பியுள்ளார். கண்மூடித்தனமான கோபத்தில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறமிருந்த கிணற்றடி பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு யாருடைய பேச்சையும் கேட்காமல், ஆவேசத்தின் உச்சத்தில் இருந்த ஆகாஷ் குமார், தனது சொந்த 6 மாதக் கைக்குழந்தையைத் தரைப்பகுதியில் கொடூரமாகத் தூக்கிப் பிடித்து அடித்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் செயலில் பச்சிளம் குழந்தை படுகாயமடைந்தது. இரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையைக் கண்டு அலறித் துடித்த தாய் நிராலி தேவி, உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்.
அங்கு நிலைமை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், ராஞ்சிக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பச்சிளம் குழந்தையின் உயிர் பிரிந்தது.
குழந்தையின் மறைவுச் செய்தி அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. கதறி அழுத தாய் நிராலி தேவி, தன் கணவன் ஆகாஷ் குமாருக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், கொடூரச் செயலில் ஈடுபட்ட தந்தை ஆகாஷ் குமாரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
