மகாராஷ்டிரா மாநிலம் அருகே உள்ள ஒரு அரசு பழங்குடியினர் ஆசிரமப் பள்ளியில் 21 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே ஆசிரமப் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலைகள் நிலவி வரும் சூழலில், இந்த கொடூர சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆசிரமப் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் மாணவிகள் தங்கியிருந்தனர். அங்கு சமையலறை உதவியாளராக வேலை செய்து வந்த கண்பத் ஜிப்ரு காவ்லி என்ற நபர், மாணவிகள் உணவருந்தவும் தட்டுகளைக் கழுவவும் கீழே வரும் நேரத்தைப் பயன்படுத்தி அவர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளான். மேலும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை நேரடியாகப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் அநாகரிகமான நடத்தையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள், தைரியமாக விடுதிக் காப்பாளரிடம் சென்று தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்துப் புகார் அளித்தனர். விடுதிக் காப்பாளர் உடனடியாக மாணவிகளை ஷாப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். காவல் துறையினர் குற்றவாளி மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனை உடனடியாகக் கைது செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த மிகவும் அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், இந்தக் குற்றவாளி ஏற்கனவே ஒரு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவன் என்பதாகும். அப்படிப்பட்ட மோசமான பின்னணி கொண்ட ஒருவனை, மீண்டும் அதே பள்ளிக்கு, அதுவும் சிறுமிகளோடு தொடர்பில் இருக்கும் வேலைக்கு யார் நியமித்தது என்ற கேள்வியைப் பெற்றோர்கள் கொந்தளிப்புடன் எழுப்புகின்றனர்.

தங்கள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் பயமும் கோபமும் நிலவுகிறது. வெறும் தற்காலிகப் பணிநீக்கம் போன்ற சம்பிரதாய நடவடிக்கைகளோடு நின்றுவிடாமல், இந்த குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் தவறிழைத்த அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் உறுதியாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.