புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கோவில் உண்டியல்கள் திருடப்பட்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, கடந்த மாதம் அமாவாசை தினத்தன்று கீரமங்கலம் கொடிக்கரம்பை கிராமத்தில் ஒரு கோவிலில் திருட முயன்றபோது, கிராம மக்கள் திரண்டதால் திருடர்கள் தங்கள் பைக் மற்றும் செல்போனை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினர். தப்பியோடும் வழியில் மற்றொரு வீட்டின் வாசலில் நின்ற பைக்கைத் திருடிக்கொண்டு அவர்கள் மாயமானார்கள்.

இதேபோன்று, இந்த மாதமும் அமாவாசை நாளே குறிவைத்து மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள  இரண்டு கோவில்களிலும் ஒரே இரவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டுத் திருடப்பட்டிருந்தன. இதுமட்டுமின்றி, ஆலங்குடியில் இரண்டு கோவில்களிலும், ஆவுடையார்கோவிலில் ஒரு கோவிலிலும் அடுத்தடுத்து உண்டியல் திருட்டுகள் அரங்கேறியதால் குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரமாக இறங்கினர்.

கோவில்களில் தொடரும் உண்டியல் திருட்டுகளைத் தடுக்க டிஎஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் களமிறங்கினர். பழைய குற்றவாளிகளின் கைரேகை பதிவுகளை வைத்து நவீன முறையில் விசாரணை நடத்தியபோது, சில துப்பு துலங்கியது. அதன் அடிப்படையில், காளிதாஸ் என்பவர்தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. உடனடியாகச் சென்று பார்த்தபோது, அவர் சில்லறைக் காசு மூட்டையைத் தலைக்கு வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது தனிப்படை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கைதான காளிதாசிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. சிறையில் இருந்தபோது தனக்கு அறிமுகமான  விஜய் மற்றும் நாகராஜ் ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

வெளியே வந்ததும் மூவரும் கூட்டு சேர்ந்து, பகல் நேரங்களில் ஊர் ஊராகச் சென்று கோவில்களை நோட்டமிட்டுப் பைக்குகளைத் திருடுவதையும், அமாவாசை இரவுகளில் குறிவைத்து உண்டியல்களை உடைத்துத் திருடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். திருடிய பணத்தில் ஜாலியாக மது அருந்தி, ஆடம்பரமாகச் செலவு செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் பொதுமக்களிடம் சிக்கியபோது எப்படியும் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தோம், ஆனால் தப்பிவிட்டோம் என்று காளிதாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கூட்டாளி நாகராஜிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், போலீசாரைக் கடித்துவிட்டுத் தப்பிக்கக் கூடியவன் என்றும் அவர் முன்னதாகவே எச்சரித்துள்ளார்.

காளிதாஸ் அளித்த தகவலின்படி பதுங்கியிருந்த நாகராஜைப் பிடிக்கச் சென்றபோது, அவர் காவலர்களைக் கடித்துவிட்டுத் தப்பிக்க முயன்றார். இருப்பினும், விழிப்புடன் செயல்பட்ட தனிப்படை போலீசார் சினிமா பாணியில் அவரை மடக்கிப் பிடித்தனர். உடன்  விஜய்யையும் கைது செய்த போலீசார், அமாவாசை திருடர்கள் மூன்று பேரையும்  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் போலீசார் அவர்களிடம்  தீவிர விசாரணை நடத்தித் திருடப்பட்ட பொருட்களை மீட்டதுடன், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். துரிதமாகச் செயல்பட்டுப் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அமாவாசை திருடர்களைக் கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாருக்கு மேற்பனைக்காடு கிராம மக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.