உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பான்கி தொழில்துறை பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், பார்த்த அனைவரையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு சாக்லேட் தயாரிப்பு நிறுவனம், விற்பனைக்கு உகந்ததல்ல என்று காலாவதியான சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்களை குப்பைக் கிடங்கில் கொட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் பரவியதையடுத்து, அந்த இடத்திற்கு ஓடோடி வந்த அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு சாக்லேட்டுகளை அள்ளத் தொடங்கியுள்ளனர். வெறும் கைகளால் அள்ளியதோடு நிற்காமல், சிலர் சாக்கு மூட்டைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பெரிய பாத்திரங்களோடு வந்து கிலோ கணக்கில் காலாவதியான சாக்லேட்டுகளைச் அள்ளிச் சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.
ஒரு பொதுக் குப்பைக் கிடங்கில் தரையில் கிடக்கும் சாக்லேட்டுகளை, அதன் ஆபத்து அறியாமல் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளும் இந்த வீடியோ, உணவுப் பாதுகாப்பு குறித்தப் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
காலாவதியான மற்றும் கெட்டுப்போன இனிப்புகளை உண்பதால் உடலுக்கு ஏற்படும் கடுமையான உடல்நலக் கேடுகளைப் பற்றி எவ்வித பயமும் இன்றி, மக்கள் இவற்றைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இந்த சாக்லேட்டுகள் சொந்த உபயோகத்திற்காக எடுத்துச் செல்லப்படுகிறதா அல்லது உள்ளூர் கடைகளில் மீண்டும் விற்பனை செய்யப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால், சமூக ஆர்வலர்கள் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுவாகவே காலாவதியான மற்றும் பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களை அழிப்பதற்கு என்று முறையான சட்ட விதிகளும் பாதுகாப்பு நடைமுறைகளும் உள்ளன. ஆனால், இதுபோன்று திறந்தவெளியில் குப்பையாகக் கொட்டிவிட்டுச் செல்வது, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக அச்சுறுத்தலாக அமைகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறையோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்காத நிலையில், தொழிற்சாலைகளின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் மீதும், காலாவதியான உணவுகளை முறையாக அழிக்கத் தவறும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
यूपी : कानपुर में किसी ने एक्सपायरी चॉकलेट, टॉफी, बिस्किट के डिब्बे कूड़े के ढेर पर फेंक दिए। लोग उन्हें भी उठाकर ले गए। pic.twitter.com/Hd8vfZVixg
— Sachin Gupta (@Sachingupta) August 25, 2026
“>
