தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொடர் ராஜினாமா விவகாரம் அவையில் பெரும் பரபரப்பையும், காரசார விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கேள்வி நேரத்தின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடந்த விவாதங்கள் அவையில் அனலைக் கிளப்பின.
அவையில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், “ஒரு மாத காலத்திற்குள் 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்; ஆதாயம் இன்றி யாரும் இப்படி ராஜினாமா செய்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், 6 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் தங்களது குறைகளை யாரிடம் சென்று கூறுவது என்றும் அவர் வாதிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காகவே அந்த 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கமளித்தார்.
இதற்கிடையே பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “பொறுப்பு அமைச்சர்களால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தொடர்ந்து சென்று மக்கள் சேவையாற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
#WATCH | “பேச வாய்ப்பு கொடுக்கலனா நிக்கதான் செய்வாங்க.. என்னங்க இது அநியாயம்?”
அவைத் தலைவர் பேச்சுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசும்போதெல்லாம் மைக்கை அணைத்ததால் அதிமுகவினர் எழுந்து முழக்கமிட்டனர்.#SunNews | #TNAssembly |… pic.twitter.com/JBg5M3u3gT
— Sun News (@sunnewstamil) August 25, 2026
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள அந்தத் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், எடப்பாடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. வேட்பாளரின் மனு தள்ளுபடிதான் செய்யப்பட்டது என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வார்த்தைப் போரினால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாகத் தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும், நாம் அதனை முடிவு செய்ய முடியாது என்றும் சபாநாயகர் தெளிவுபடுத்தினார். மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் உதயநிதி பங்கேற்பதைத் தடுக்கச் சதி நடந்ததாகவும், அந்தச் சதியை முறியடித்து அவர் அவையில் அமர்ந்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசினார். சிறுபான்மை ஆணையத் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டதற்கு, கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் கலந்துகொண்டதை அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேச அனுமதிக்கப்பட்டபோது, திமுக தரப்பில் கடும் அமளியும் எதிர்ப்புகளும் கிளம்பின.
மேலும் முன்னதாக கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பேசியதால் சபாநாயகருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே சிறிது நேரம் வார்த்தை மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
