தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் மேம்பாடு மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான திட்டங்களை அவர் அறிவித்தார்.
இதில் மிக முக்கியமாக, மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டத்தை விரிவாக்கம் செய்து அறிவித்தார்.
வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் ‘மகளிர் வெற்றிப்பயணத் திட்டம்’ என்ற பெயரில் இது செயல்படுத்தப்படும். எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லாப் பயணம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மாநிலம் முழுவதற்கும் பொருந்தும்.
குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சியடையும் வகையிலான மற்றொரு அறிவிப்பாக, முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் அமலுக்கு வரும். இதன் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவர். ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பங்களுக்கு இச்சலுகை கிடைக்கும்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பரந்தூர் புதிய விமான நிலைய அமைப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதை விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
