தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில், காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.

அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் “எங்களுக்குப் பின்னாடி இனி யாரும் வர மாட்டார்கள்” என்று கூறுவது வாடிக்கையான ஒன்றுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், த.வெ.க.வினர் தி.மு.க. இனி வெல்ல முடியாது என்று கூறுவதையும் இதனுடன் ஒப்பிட்டார். கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகளும் இதே போன்ற கருத்துக்களைக் கூறியதை நினைவு கூர்ந்த அவர், அவர்களையும் தாண்டித்தான் தி.மு.க. பலமுறை வெற்றிகளைக் குவித்துள்ளது என்றார். இது போன்ற பேச்சுகள் அரசியல் ஞானத்துடன் வருவதல்ல என்றும் அவர் வெளிப்படையாகவே விமர்சித்தார்.

இதற்கிடையில், முதல்வர் விஜய் தனது மேஜையில் இருக்கும் மூன்று பைல்களைத் திறக்க வைத்துவிடாதீர்கள் என்று விடுத்த எச்சரிக்கையும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த சவாலும் அரசியல் களத்தைக் சூடாக்கியுள்ளன. தைரியம் இருந்தால் அந்தப் பைல்களைத் உடனடியாகத் திறந்து, யார் மீது தவறு இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என துரைமுருகன் வலியுறுத்தினார். ஒரு வாரத்திற்குள் அந்தப் பைல்கள் திறக்கப்படவில்லை என்றால், சட்டமன்றத்தில் முதல்வர் தவறான தகவலைத் தந்தார் எனக் கூறி உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

மேலும் “எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்குச் செல்ல வேண்டும், ஆளும்கட்சிக்காரன் கேடயத்தோடு வரவேண்டும். எதிர்க்கட்சி சுழற்றும், ஆளும்கட்சி அதைத் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்கலாம், இல்லையென்றால் சலாம் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்; இதுதான் சட்டமன்றத்தின் யதார்த்தம்” என்று தனது நீண்ட கால அரசியல் அனுபவத்தை நகைச்சுவையோடும் காரசாரமாகவும் விவரித்துள்ளார்.