பார்ப்பதற்கு அமைதியாகவும் உயிரற்றதாகவும் தெரியும் நிலவு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சுறுசுறுப்பான புவியியல் மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்திருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகள் நிலவின் மேற்பரப்பில் சுமார் 80 கிலோமீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரம்மாண்ட எரிமலை அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளனர். நிலவின் பழங்கால வரலாற்றை புரிந்துகொள்வதில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதில் குறிப்பிடத்தக்க அமைப்பு பிரின்ஸ்-ஹார்பிங்கர் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 78 முதல் 80 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த அமைப்பு, சுற்றியுள்ள நிலப்பரப்பை விட சுமார் 239 மீட்டர் உயரமாக உள்ளது. அதன் மையப் பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் அகலமுள்ள பள்ளமும் காணப்படுகிறது. இது ஒரு காலத்தில் எரிமலையின் வாய்ப்பகுதியாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நிலவின் மேற்பரப்பு படங்களுடன் அதன் உயரம் தொடர்பான தரவுகளையும் ஆய்வு செய்தபோதே இந்த அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் காணப்படும் வளைந்த கால்வாய் போன்ற தடயங்கள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பாய்ந்த எரிமலைக் குழம்பின் அடையாளங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவை பரந்த மற்றும் மெதுவான சரிவைக் கொண்ட ‘கவச எரிமலை’ வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
இந்தப் பகுதியில் எரிமலைச் செயல்பாடுகள் சுமார் 340 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்கலாம் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். அருகிலுள்ள எரிமலைக் குழம்பு சமவெளியின் வயது சுமார் 350 கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று அமைதியாகத் தெரியும் நிலவில் ஒரு காலத்தில் எரிமலைகள் வெடித்து, குழம்பு பாய்ந்து, அதன் மேற்பரப்பை உருவாக்கியிருக்கலாம் என்ற நிலவின் பழைய வரலாறு மேலும் தெளிவாகிறது.
