மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி நகரில் வீட்டின் முன்பு தினமும் அமர்ந்து செல்போன் பயன்படுத்தியபடி இளைஞர்கள் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 65 வயது ஜமீர் அகமது முகமது காசிம் என்பவரின் குடும்பத்தினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரச்சினை பெரிதான நிலையில், சில இளைஞர்கள் மேலும் பலரை அங்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 8 முதல் 10 பேர் வரை அங்கு திரண்டதாக கூறப்படும் நிலையில், குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது ஜமீர் அகமது, பிரச்சினையை சமாதானப்படுத்தும் நோக்கில் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில் ஜமீர் அகமது காயமடைந்தார். சம்பவம் முழுவதும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஜமீர் அகமதுவை குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கும்பார்வாடா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடல் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக பிவாண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜமீர் அகமதுவின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை உறுதி செய்வதற்காக உடல் பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுக்காக மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு இளைஞர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்துக்கான முழுமையான காரணம் தெளிவாகும் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.