சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்திலுள்ள தௌர்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட சப்ரா கிராமத்தில் ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த பயங்கர இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிராதர் யாதவ் (55) மற்றும் அவரது மனைவி குலாபி யாதவ் (50) தம்பதியினர் தங்களது மூத்த மகனான ஜாது யாதவுடன் (34) பழைய வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களின் இளைய மகன் மோகன் யாதவ் அருகில் வேறு ஒரு வீட்டில் மனைியுடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி குடும்பத் தகராறு காரணமாக மூத்த மகன் ஜாது யாதவ் தனது பெற்றோரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கிக் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூரக் கொலைக்குப் பிறகு, எந்தவொரு தடயமும் சிக்கக் கூடாது என்பதற்காக அந்த இடத்தை மாட்டுச் சாணத்தால் மெழுகி மறைக்க முயன்றுள்ளார். பின்னர் பெற்றோரின் உடல்களைத் தனித்தனி சாக்குகளில் கட்டி ஒரு அறையில் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மறுநாள் காலையில் பால் வாங்குவதற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த இளைய மகன் மோகன், வீடு பூட்டியிருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் பெற்றோரின் உடல்கள் சாக்கில் கட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோன அவர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாக இருந்த மூத்த மகன் ஜாது யாதவை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். காவல்துறையினரின் விசாரணையின் போது, குடும்பச் சண்டை காரணமாகத் தான் தான் பெற்றோரைக் கொலை செய்ததாக அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
