தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாகவே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் ‘நோ புரொமோஷன்’ கொள்கை பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. தான் நடிக்கும் தமிழ் அல்லது தென்னிந்தியப் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தொடர்ந்து தவிர்த்து வரும் நயன்தாரா, சமீபத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவான ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் புரொமோஷன் விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் மீண்டும் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்துத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், பிரபல விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் தனது காட்டமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“தமிழ் சினிமாவில் தங்களைத் தயாரித்த, தங்களுக்கு வாழ்வளித்த தயாரிப்பாளர்களின் பட விழாக்களுக்கு வர மறுக்கும் நயன்தாரா, வேறு மாநிலத் திரைப்பட விழாக்களுக்கு மட்டும் கலந்துகொள்வது ஏன்? இந்த இரட்டை வேடம் சரியா?” என்று அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் அஜித்தும் நயன்தாராவும் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள்தான் என்றும், உச்ச நட்சத்திரமாக உயர்ந்த பிறகு தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளாமல் விலகியிருப்பது நியாயமற்றது என்றும் அவர் சாடியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுக்கும் போது, அதில் நடிக்கும் உச்ச நட்சத்திரங்கள் தங்களது கடமையை உணர்ந்து படப் விளம்பரங்களில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதைத் திருப்பூர் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு படத்திற்குப் புரொமோஷன் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணராமல், ஒருசிலருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதும், மற்ற தமிழ் தயாரிப்பாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் திரையுலகில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.