மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள கோத்யா டோங்கர்  மலையில் நிகழ்ந்த ஒரு கண்மூடித்தனமான சோகச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. ஐபோன் வாங்குவது தொடர்பான குடும்பத் தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மலையிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 19 வயது இளைஞர் குனால் சங்வாடே  அவரது தந்தை முரளீதர் சங்வாடே (48) மற்றும் தாய் சங்கீதா சங்வாடே ஆகியோர் ஆவர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணி அளவில், ஐபோன் வாங்குவது தொடர்பாக குநாலுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குனால், கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள மலையின் உச்சிக்குச் சென்றுள்ளார். மகனின் பாதுகாப்பு குறித்துப் பயந்துபோன பெற்றோரும், ஊர் மக்களும் உடனடியாக மலையின் உச்சிக்குச் சென்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

சம்பவம் நடந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, தந்தை முரளீதர் தனது மகன் குநாலை மலையின் விளிம்பிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு இழுக்க முயன்றார். அப்போது இருவரும் நிலை தடுமாறி சுமார் 250 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தலைகுப்புற விழுந்தனர். தன் கண் முன்பே கணவனும் மகனும் பள்ளத்தாக்கில் விழுவதைக் கண்டு அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த தாய் சங்கீதா, என்ன செய்வதென்று தெரியாமல் சில கணங்களிலேயே அதே மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த கோர விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் நடப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் கண்களையும் கலங்க வைத்துள்ளது. ஒரு வீடியோவில் குனால் தனது தாயுடன் அமர்ந்து மகிழ்ச்சியாகத் தேநீர் அருந்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. மற்றொரு வீடியோவில், குனால் தனது தாயின் கால்களைக் கழுவி அவரிடம் ஆசிர்வாதம் பெறும் நெகிழ்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது.

மேலும், சம்பவ இடத்திலிருந்து மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், மலையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் தனது மகனை மீட்டெடுக்க தாய் சங்கீதா கதறி அழுவது பதிவாகியுள்ளது. மகனை மீட்க முயன்ற அவர், தன் மகனின் கால்களில் விழுந்து மன்றாடியும், “எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம், வா மகனே வீட்டிற்குப் போகலாம்” என்று கதறி அழுதும் குனால் கேட்கவில்லை. “அம்மா, யாருமே என் பேச்சைக் கேட்பதில்லை; வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை” என்று கூறிவிட்டு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தற்பொழுது இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்மார்ட்போன்களுக்காக இளைய தலைமுறையினர் எடுக்கும் விபரீத முடிவுகள் குறித்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.