தெலங்கானா மாநிலத்தில் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சிர்யாலா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான லலிதா என்ற பெண்ணுக்கே இந்தத் துயரம் நேர்ந்துள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த லலிதாவைக் கரீம்நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவரது ஆரோக்கியத்தில் விரைவாக முன்னேற்றம் ஏற்படாததால், அவரைத் தொடர்ந்து பராமரிக்க முடியாது எனக் கருதிய குடும்பத்தினர், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள புதருக்குள் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்த மல்லேஷ் என்பவர், காட்டில் ஆதரவின்றிக் கிடந்த பெண்ணைக் கண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் லலிதாவை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன் சொந்தக் குடும்பத்தினரே நோயுற்ற பெண்ணைக் காட்டில் விட்டுச்சென்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
