மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் நிகழ்ந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய இரண்டு உடன்பிறந்த சிறுவர்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம், 40 மணி நேரங்களைக் கடந்தும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே நீடித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில், 12 வயது மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். ஆனால், அதன்பிறகு அவர்கள் வீடு வந்து சேரவில்லை. நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குழந்தைகளின் தாயாரின் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த இரண்டு சிறுவர்களும் அடையாளம் தெரியாத சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவருடன் செல்வது பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தாயாருக்கும் சந்தேகத்திற்கிடமான ஆண் நண்பருக்கும் இடையேயான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதனால், குழந்தைகளைக் கடத்தியதில் அல்லது காணாமல் போனதற்குப் பின்னால் தாயின் நண்பருக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் மக்கள் மத்தியில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. இந்த புதிய கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 4 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, சாத்தியமான அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா பட்லே கூறுகையில், “தாயாரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்ணின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர் பிடிபட்டதும், குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதும் உண்மை நிலவரம் வெளிவரும்” என்றார். தற்போது வரை குழந்தைகள் எந்த நிலையில், எங்கு இருக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது.
