இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்  எதிர்பாராத விதமாகக் காயம் அடைந்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் இன்னிங்ஸின் போது, இலங்கை அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார வீசிய ஆபத்தான ஷார்ட் பந்து, ரிஷப் பந்தின் கைகளில் பலமாகத் தாக்கியது. அந்தப் பந்தை அவர் புல் ஷாட்  ஆட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது கிளவுஸ் மற்றும் கைக் மணிக்கட்டில் பந்து பாய்ந்தது. பந்து தாக்கியவுடன் கடுமையான வலியால் துடித்த பந்தைக் கண்டு உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் களத்திற்கு விரைந்து வந்தார்.

வலியைக் குறைக்க உடனடியாக ஐஸ் பேக் வைக்கப்பட்டது. காயத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த கையில் டேப் சுற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கடுமையான வலி குறைந்தபாடில்லை என்பதால், நீண்ட தாமதத்திற்குப் பிறகு ரிஷப் பந்த் மிகுந்த வேதனையுடன் களத்தை விட்டு வெளியேறி டக்-அவுட்டிற்குத் திரும்பினார்.அவருக்கு மாற்றாக அனுபவமிக்க வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார்.

காலி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கிய ரிஷப் பந்த், அணியின் பிரதான விக்கெட் கீப்பராகவும் திகழ்கிறார். தற்போது அவர் காயம் அடைந்து வெளியேறியிருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், அணியின் பிளேயிங் லெவனில் துருவ் ஜுரேல்  இருப்பதால், அவர் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏற்கனவே இந்திய அணியில் பல வீரர்கள் காயத்தால் அவதிப்படும் நிலையில் இது தொடர்பாக கேப்டன் கில் கூட நொந்து கொண்டிருந்தார். மேலும் இப்படி இருக்கையில் தற்போது ரிஷப் காயமடைந்த அணியில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.