இன்றைய காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் பலருக்கும் தங்களது பணிச்சூழல் மற்றும் வேலைப்பளு குறித்து புலம்புவது ஒரு அன்றாட வழக்கமாகவே மாறிவிட்டது.

மேலும் “காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை வேலையைப் பற்றியே நினைத்து புலம்புவதும், அதே வேலையைத் தொடர்ந்து செய்வதும் எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பி, சமூக வலைதளங்களில் இளம் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் பேசியுள்ள பெண், “உங்களுக்குச் செய்யும் வேலை உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றால், அல்லது அந்தச் சூழல் மிகவும் நச்சுத்தனமாக இருந்தால், உடனடியாக அந்த வேலையை விட்டு விலகி உங்களுக்குப் பிடித்த வேறு நல்ல வேலையைத் தேடிக் கொள்ளுங்கள்.

அதை விடுத்து, தினமும் அதே அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்து கொண்டே, தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பது உங்களுடைய மன அமைதியை கெடுப்பதுடன், சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும்” என்று மிக நேரடியாகவும் காரசாரமாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லோராலும் உடனடியாக வேலையை விட்டுவிட்டு பிசினஸ் செய்யவோ அல்லது சொந்தமாக ஸ்டார்ட்-அப் தொடங்கவோ முடியாது என்பதை ஒப்புக்கொள்ளும் அவர், இருக்கும் வேலையைச் நேசித்துச் செய்வதும் அல்லது அதிலிருந்து வெளியேறுவதுமே அறிவார்ந்த செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் இடையே இரு வேறு கருத்துக்கள் உருவாகி காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒரு தரப்பினர் “இவர் சொல்வது முற்றிலும் உண்மை; பலர் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா புலம்பிக் கொண்டே காலத்தைக் கழிப்பார்கள்” என்று ஆதரிக்கின்றனர்.

ஆனால், மறுதரப்பினரோ “குடும்ப சூழ்நிலை, கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலரால் நினைத்த மாத்திரத்தில் வேலையை விட முடியாது; அப்படி இருக்கும்போது புலம்புவது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வழி மட்டுமே” என்று எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

“>