ரயில்களில் பிரயாணம் செய்யும்போது அன்றாடப் பொருட்களை விற்பனை செய்யும் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ரயில் வியாபாரி, தனது அபார திறமையால் ரயில் பயணிகளை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளார். ரயிலில் சோப், பேஸ்ட் மற்றும் பிரஷ் விற்றுக்கொண்டே தன்னால் 18 முதல் 19 மொழிகள் வரை சரளமாகப் பேச முடியும் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
லக்ஷய் மேத்தா என்ற எக்ஸ் பயனர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. ரயிலில் பொருட்களை விற்றுக்கொண்டு வந்த அந்த நபரிடம் பயணி ஒருவர் பேச்சு கொடுத்தபோது, அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்ற விவரமும், அவரது மொழித் திறமையும் வெளிச்சத்திற்கு வந்தது.
பயணிகளிடம் உரையாடும்போது அவர் மிகவும் இயல்பாக இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மாநில மொழிகளுக்கு மாறிப் பேசினார். அதுமட்டுமின்றி, வெவ்வேறு இந்திய மொழிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமைகளையும், வார்த்தைகளின் தொடர்புகளையும் அவர் விளக்கிய விதம் அங்கிருந்த பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.
அவர் விற்கும் பொருட்களை விட, அவரது அசாத்திய மொழித் திறமையைப் பார்த்த பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் பேசத் தொடங்கினர். எவ்வித முறையான பயிற்சியும் இன்றி, சுய முயற்சியால் பல மொழிகளைக் கற்றுக்கொண்டதாகவும், இன்னும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் தனக்கு இருப்பதாகவும் அந்த வியாபாரி கூறியுள்ளார்.
A man selling toothbrushes, toothpaste and soap on a train knows 18–19 languages! 😲 He says he loves learning new languages. pic.twitter.com/OUWMMb2I90 — Lakshay Mehta (@lakshaymehta08) August 21, 2026 “>
கடினமான வாழ்க்கைச் சூழலிலும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தன்னம்பிக்கையுடன் சரளமாகப் பேசும் இந்த நபரின் வீடியோ, தொடர்ச்சியான கற்றலுக்கும் உழைப்பிற்கும் மிகச் சிறந்த சான்றாகத் திகழ்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
