சமூகத்திற்கு உயிர்காக்கும் சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது தொடர்ந்து கவலை அளித்து வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் இருந்த பெண் செவிலியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்திரநகர் மாவட்டம் லிம்ப்டி அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் இருந்த 26 வயதுடைய செவிலியர் உன்னதிபென் கனுபாய் சோாலங்கி  என்பவர் தனது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த திவ்யராஜ்சிங் கஜேந்திரசிங் ராணா என்ற நபர், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் தகராறில் ஈடுபட்டுள்ளார். மருத்துவர் எங்கே என்று ஆக்ரோஷமாக விசாரித்ததுடன், அமைதியாகப் பேசுமாறு கேட்ட அந்தப் பெண் செவிலியரை நோக்கிச் சென்று திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் சிசிடிவி  காட்சிகள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களை ஆத்திரமடையச் செய்துள்ளன. தாக்குதலுக்குள்ளான செவிலியர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி மற்ற மருத்துவப் பணியாளர்களின் உதவியை நாடியுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் புகாரின் பேரில், லிம்ப்டி காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து திவ்யராஜ்சிங் ராணாவைக் கைது செய்தனர். மேலும், குற்றவாளியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ மற்றும் நர்சிங் பணியாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இரவு நேரங்களில் தனியாகவோ அல்லது குறைந்த பணியாளர்களுடனோ பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான பாதுகாப்பின்மையை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.