ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கோயிலுக்கு கணவருடன் ஸ்கூட்டியில் சென்ற முன்னாள் பெண் கவுன்சிலர் ரேணு நர்வாலா, மாநகராட்சி டம்பரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தன்ராஜ் நர்வாலா ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற நிலையில், அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், முகத்திலும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் கோயிலுக்கு தரிசனம் செய்ய கணவன், மனைவி இருவரும் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நடந்து சென்ற பெண் ஒருவரை கடந்து செல்ல முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஸ்கூட்டி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ரேணு நர்வாலா சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பின்னால் வந்த மாநகராட்சி டம்பர் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு டம்பரை ஓட்டியவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ரேணு நர்வாலாவின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காயமடைந்த அவரது கணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, மாநகராட்சி டம்பர் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டதாக ரேணுவின் மாமனார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டம்பரின் காப்பீடு காலாவதியாகியிருந்தபோதும் அது சாலையில் இயக்கப்பட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்தும், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் தரிசனத்துக்குச் சென்ற முன்னாள் கவுன்சிலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கோட்டாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
