மகாராஷ்டிரா மாநிலம் ஜள்காவன் மாவட்டம், நசிதாபாத் பகுதியில் உள்ள பாதலி சாலையில் அமைந்துள்ள முக்தேஸ்வர் நகரில் காவல்துறை ஊழியர் ஒருவரின் வீடு உள்ளது. வழக்கம்போல் இரவு நேரத்தில் குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இருவர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

மேலும் கையில் கூர்மையான கத்தியும், துப்பாக்கியும் வைத்திருந்த அந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்ணைக் கண்டதும் பாய்ந்து சென்று அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். மேலும், நெற்றியில் துப்பாக்கியை முனையிலும் நிறுத்தி, வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை உடனே தருமாறு கொடூரமாக மிரட்டியுள்ளனர்.

காவலர் ஒருவரின் வீட்டிலேயே புகுந்து இவ்வளவு துணிச்சலாகக் கொள்ளையடிக்கத் துணிந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. கழுத்தில் கத்தியும், எதிரே துப்பாக்கியும் நீட்டப்பட்ட அந்த அதிர்ச்சிகரமான சூழலிலும், அந்தப் பெண் சற்றும் மனதை தளரவிடாமல் மிகுந்த சாதுரியத்துடனும் தைரியத்துடனும் செயல்பட்டுள்ளார்.

மேலும் கொள்ளையர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தந்திரமாக ‘டயல் 112’ என்ற அவசர உதவி எண்ணிற்குத் தொடர்புகொண்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். பெண் சாதுரியமாகச் செயல்பட்டு காவல் துறைக்குத் தகவல் அளித்ததை அறிந்த கொள்ளையர்கள், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் உடனடியாக அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் உடனடிச் செயல்பாட்டினாலும் துணிச்சலினாலும் பெரும் அசம்பாவிதமும், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும் நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குப் விரைந்து வந்த நசிதாபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய அந்த ஆயுதமேந்திய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை ஊழியரின் வீட்டிலேயே நள்ளிரவில் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்ற இந்தத் துணிச்சலான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அறிமுகமில்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.