தில்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர் ஒருவர், வேலைக்கு சேர்ந்த வெறும் 6 மணி நேரத்திலேயே ராஜிநாமா செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நேர்காணலின்போது நிறுவனத்தின் பணிச்சூழல் குறித்து வேறுவிதமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், பணியில் சேர்ந்த பிறகு உண்மை நிலை தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முதல் நாளிலேயே அந்த ஊழியர் பணியைத் தொடர முடியாது என முடிவு செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை ‘ஹையரிங் இன்சைடர்’ நிறுவனர் ஹர்ஷித் ஸ்ரீவாஸ்தவ் லிங்க்ட்இனில் பகிர்ந்துள்ளார்.

ஒரு ஊழியர் நிறுவனத்தை விட்டு விரைவாக வெளியேற விரும்பிய நிலையில், அவருக்கு மாற்றாக புதிய நபரைத் தேடி, அவருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என மேலாளர் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதிய ஊழியர் ஒருவர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் நாளிலேயே அவருக்கு நிறுவனத்தின் பணிச்சூழல், வேலைப்பளு மற்றும் பணிநேரம் குறித்து பழைய ஊழியர் வெளிப்படையாக விளக்கியுள்ளார். நேர்காணலின் போது தெரிவிக்கப்படாத பல விஷயங்கள் பயிற்சியின்போது புதிய ஊழியருக்கு தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த புதிய ஊழியர், பணியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே மேலாளரிடம் தன்னால் இந்த வேலையைத் தொடர முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தனது ராஜிநாமாவையும் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர், பழைய ஊழியரைத் தொடர்பு கொண்டு புதிய ஊழியரிடம் என்ன கூறினீர்கள் எனக் கோபமாகக் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அந்த ஊழியர், புதியவருக்கு நிறுவனம் கற்றுக் கொடுக்கச் சொன்ன அனைத்தையும், அதாவது வேலையின் உண்மை நிலையை மட்டுமே தெரிவித்ததாக பதிலளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் லிங்க்ட்இனில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, வேலை தேடுபவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் விவாதம் உருவாகியுள்ளது. நேர்காணலின்போதே பணிச்சுமை, வேலை நேரம் மற்றும் நிறுவனத்தின் பணிச்சூழல் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நிறுவனங்கள் வேலைக்கான உண்மை நிலையை மறைத்து ஊழியர்களைச் சேர்ப்பது, பின்னர் இரு தரப்பினருக்கும் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கும் என்றும் கூறப்படுகிறது. முதல் நாளிலேயே வேலையை விட்ட இந்தச் சம்பவம், பணியிடத்தில் வெளிப்படைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் பேச வைத்துள்ளது.