உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் புதன்கிழமை அதிகாலை நடந்த கோர சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் பலத்த காயமடைந்தனர். நேபாளத்தின் ரூபைடிஹா பகுதியில் இருந்து சண்டீகர் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. காரில் பயணம் செய்த அனைவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் தீப்னா காத்திரியும் ஒருவர் ஆவார்.
குன்வர்கான் காவல் நிலையப் பகுதியில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்ததாகக் கூறப்படுகிறது. நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தீபக் ஒலி காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கார் சாலையில் கவிழ்ந்து சுமார் 25 முதல் 30 மீட்டர் தூரம் வரை உருண்டு சென்றது. இந்த விபத்தில் தீப்னா காத்திரி, விப்னா சுனம்கர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பதாயூன் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் தீபக் ஒலி, புஷ்பா, ஞான பகதூர் மல்லா, யாதவ் போடே உள்ளிட்ட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் தீப்னா காத்திரியின் 2 வயது மகன் வினோத்தும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்த 2 வயது வினோத் தனது தாயைத் தேடி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தாய் உயிரிழந்தது தெரியாமல், குழந்தை தொடர்ந்து “மம்மி… மம்மி…” என அழைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தையின் இந்த பரிதாபமான நிலையைப் பார்த்த மருத்துவமனையில் இருந்தவர்களும் கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்தனர். ஒரு சாலை விபத்து, தாயை இழந்த நிலையில் அந்த பிஞ்சுக் குழந்தையை தவிக்கவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
