உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் 18 வயது இளம் குத்துச்சண்டை வீரர் பிரதம் சிங் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. பிரதம் சிங் கலப்பு தற்காப்புக் கலை மற்றும் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வந்ததுடன், மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரதம் சிங்கின் தாயார் நீது ராணி அளித்த புகாரில், மகனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரித்திகாவுடன் நட்பு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இருவரது நட்புக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பிரதம் சிங் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த உறவை ஏற்க மறுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு ரித்திகாவின் பெற்றோர் பிரதம் சிங்கின் வீட்டுக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு பிரதம் சிங் டேராடூனில் இருந்து காஜியாபாத் திரும்பியுள்ளார். மறுநாள் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் மகாகுண்புரம் குடியிருப்பில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற குடும்பத்தினர், உயிரிழந்தது பிரதம் சிங் என்பதை அடையாளம் கண்டனர். அவர் சென்றதாகக் கூறப்படும் குடியிருப்பு மற்றும் அங்கிருந்து உடல் மீட்கப்பட்ட இடம் தொடர்பான CCTV காட்சிகளும் போலீஸாரின் விசாரணையில் முக்கிய ஆதாரமாக இடம்பெற்றுள்ளன.
பிரதம் சிங்கின் மரணம் தொடர்பாக ரித்திகா, அவரது தந்தை லலித் பிரஜாபதி, சகோதரர் ஜதின் பிரஜாபதி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை, குற்றவியல் மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளுடன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதம் சிங் சென்ற பாதை, குடியிருப்பில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம், CCTV காட்சிகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை கவி நகர் உதவி காவல் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
