பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமேடைக்கு வந்த மணமகள், மாப்பிள்ளையைப் பார்த்ததும் திடீரென்று இந்தத் திருமணம் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் சத்தர்கார் பகுதியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடன் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்குத் திருமணத்திற்காக வந்து சேர்ந்தனர். ஆனால், அங்கு சென்றதும் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது. திருமணச் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பே மணமகள் இந்தத் திருமணத்திற்குத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
View this post on Instagram
மணமகள் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, தங்களுக்கு முன்பு காட்டப்பட்ட புகைப்படத்தில் இருந்த நபரும், தற்போது மண்டபத்திற்கு வந்துள்ள மாப்பிள்ளையும் வேறு வேறு நபர்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு பையனின் புகைப்படம் தனக்குக் காட்டப்பட்டதாகவும், ஆனால் தற்போது வேறொருவர் மாப்பிள்ளையாக வந்து நிற்பதாகவும் அவர் கூறியது குடும்பத்தினர் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்தத் திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் இதற்கு முற்றிலும் மாறான விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் மற்றும் ஒப்புதலோடுதான் இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர். திருமண ஏற்பாடுகளின் போது இரு குடும்பத்தினரும் கைபேசிகள் மூலமாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், மாப்பிள்ளையின் புகைப்படங்கள் மணமகள் தரப்பினருக்குப் பகிரப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், இடைத்தரகர்கள் மூலமாகவும், மணமகளின் தாயாரிடமும் உரிய புகைப்படங்கள் வழங்கப்பட்டதாக மாப்பிள்ளையின் தாத்தா மகேந்திர சிங் தெரிவித்தார்.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் தேஜிந்தர்பால் சிங் இது குறித்துக் கூறுகையில், தங்களுக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பினரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்ததாகத் தெரிவித்தார். இறுதியாக, காவல் நிலைய விசாரணையைக் தாண்டி, இரண்டு குடும்பத்தினரும் தாங்களாகவே பேசி இந்த விவகாரத்திற்கு ஒரு சுமுகமான முடிவை எட்டியுள்ளதாக டி.எஸ்.பி குறிப்பிட்டார். திருமணம் நடைபெறாமலேயே முடிவுக்கு வந்த இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசும் பொருளாகியுள்ளது.
