தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். முதலமைச்சர் விஜய் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவையில் சுட்டிக்காட்டி விவாதித்தனர்.

எதிர்க்கட்சியினரின் இந்த விவாதத்திற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாகப் பேசிவிட்டுத் தான், மக்களும் அன்பாக, ஆசையாக எங்கள் அனைவரையும் இங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். நான் பேசக்கூடாதா என்ன? இடைத்தேர்தலிலாவது சிலருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும், நல்லதே நடக்க வேண்டும் என்பதால் தான் அமைதி காக்கிறேன்” என்று காரசாரமாக பதிலளித்தார். மேலும் 3 துறைகளின் ஊழல் விவரங்கள் எனது டேபிலில் இருக்கிறது எனவும் முதல்வர் விஜய் கூறினார்.

முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, “மக்களிடம் அன்பாகவும் ஆசையாகவும் பேசித் தான், நான் ஒரே தொகுதியில் 9 முறை போட்டியிட்டு 7 முறை வெற்றி பெற்றுள்ளேன். அதுமட்டுமின்றி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராகவும் பேரவையில் வீற்றிருக்கிறேன்” எனத் தன் நீண்டகால அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

இதனிடையே, முதலமைச்சர் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் திருச்சி கிழக்குத் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இவ்வாறு காரசாரமாகவும் கோபத்துடனும் பதிலளித்து அமர்ந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்திலும் பேரவையிலும் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.