மத்தியப் பிரதேச மாநிலத்தில், 37 வயதான நபர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தனது இரண்டு குழந்தைகளையும் குளத்தில் தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், அவரைக் கத்தியால் குத்திக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

மனைவியைக் கொலை செய்த பிறகு, அந்த நபர் தனது 13 வயது மகள் மற்றும் 12 வயது மகனை அருகில் உள்ள ஆழமான குளத்திற்கு அழைத்துச் சென்று இருவரையும் தண்ணீரில் வீசியுள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், 12 வயது மகன் நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பினான்.

கரைக்கு வந்த சிறுவன், உடனடியாகச் சாலையை நோக்கி ஓடி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை எச்சரித்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மீட்புப் படையின் உதவியுடன் தீவிர இரவு நேரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

அதிகாலையில் சிறுமியின் உடலைக் குளத்திலிருந்து மீட்ட மீட்புக் குழுவினர், சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்களின் வீட்டிலிருந்து மனைவியின் உடலையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்த கொடூரக் கொலைகளுக்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.