அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நேற்று முன்தினம் இரவு வானளாவிய எம்பயர் ஸ்டேட் கட்டடம் இந்திய மூவர்ணக் கொடியின் வண்ணங்களான  வெள்ளை, பச்சை ஒளியில் ஜொலித்தது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களைக் கொண்டாடும் வகையில் இந்த பிரம்மாண்ட ஒளி அலங்கார நிகழ்ச்சி அரங்கேறியது.

ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் அசோசியேஷன்ஸ் (FIA) அமைப்பு சார்பில், இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘பாரம்பரியத்தில் நல்லிணக்கம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான 44-வது இந்தியா தினம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, கலாஸ்ரீ கலைப் பள்ளியின் சார்பில் பினா மேனன் அவர்களின் இயக்கத்தில் கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. எஃப்.ஐ.ஏ இணைச் செயலாளர் ஸ்ருஜல் பரீக் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான பிணைப்பை அழகாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசிய எஃப்.ஐ.ஏ தலைவர் அன்குர் வைத்யா, “அமெரிக்காவின் 250 ஆண்டுகால சுதந்திரத்தையும், இந்தியாவின் 80 ஆண்டுகால சுதந்திரத்தையும் ஒரே நேரத்தில் கொண்டாடுவது இரட்டை மகிழ்ச்சியைத் தருகிறது” என்று உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டார். எஃப்.ஐ.ஏ தலைவர் ஸ்ரீகாந்த் அக்கபள்ளி மற்றும் எடிசன் நகரின் மேயர் சாம் ஜோஷி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமெரிக்காவில் சுகாதாரம், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் இந்திய வம்சாவளியினர் ஆற்றிவரும் பங்களிப்புகளை மேயர் சாம் ஜோஷி பாராட்டிப் பேசினார்.

விழாவின் ஹைலைட்டாக, இந்தியாவின் நீண்டகால பாலிவுட்  தொலைக்காட்சித் தொடரான ‘தாரக் மேத்தா கா ஊல்டா சஷ்மா’ தொடரின் பிரபல நடிகர்களான திலீப் ஜோஷி, முன்முன் தத்தா, மந்தர் சந்த்வாட்கர், சோனலிகா ஜோஷி, பல்விந்தர் சிங் மற்றும் நிதேஷ் பலுனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பிரபலங்களுடன் சேர்ந்து மேயர் சாம் ஜோஷி லீவரை இழுத்து எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை மூவர்ண ஒளியில் ஜொலிக்கச் செய்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்ததுடன், எஃப்.ஐ.ஏ-வின் டிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமாகப் பார்த்தனர்.

நிறைவாக, பார்வையாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு, பிரம்மாண்ட படிக்கட்டுகளில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இந்தியக் கலாச்சாரத்தின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய இந்த நிகழ்ச்சி, அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்தது.