பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான காஜல் குமாரி, திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். காஜலுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி முசாஃபர்பூர் மாவட்டம் கன்ஷியாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் ராயுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி தனது தாய் வீட்டுக்கு காஜல் வந்துள்ளார். மறுநாளான ஆகஸ்ட் 13-ஆம் தேதி அவர் திடீரென காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

மூன்று நாள்களாக காஜலை காணாததால் குடும்பத்தினர் கவலையடைந்த நிலையில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலையில் அவரது சடலம் தாய் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். காஜலின் உடலை பார்த்த குடும்பத்தினர், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கினர்.

இதனிடையே, திருமணத்துக்கு முன்பு காஜலுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுமித் என்ற ராஜா யாதவுக்கும் காதல் இருந்ததாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார். காஜலின் திருமணத்தில் சுமித் அதிருப்தி அடைந்திருந்ததாகவும், காஜலை திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காஜலை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுமித் என்ற ராஜா யாதவ், ராம்வினய் யாதவ் உள்ளிட்ட 3 பேர் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர். முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான சுமித் என்ற ராஜா யாதவ் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். காஜலின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவரது மரணத்துக்கான உண்மையான காரணமும், சம்பவத்தின் முழுமையான பின்னணியும் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.