மனிதநேயமும் கருணையும் வெறும் மனிதர்களுக்கு இடையே மட்டும் வெளிப்படுவதில்லை, மாறாக மற்ற உயிரினங்களிடமும் அது எப்போது மலர்கிறதோ அப்போதுதான் இந்த உலகம் இன்னும் அழகானதாக மாறுகிறது.

நாட்டின் மிக விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான நகரங்களில் ஒன்றான மும்பையில், லட்சக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்கும் லோக்கல் ரயிலில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், தற்போது சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான இதயங்களை வென்று இணையவாசிகளின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

மும்பை லோக்கல் ரயில் என்றாலே காலையில் நிற்பதற்குக்கூட இடம் கிடைக்காமல் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணிக்கும் காட்சிதான் நம் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு உச்சகட்டப் போக்குவரத்து நெரிசல் நேரத்தின் போது, ரயில் பெட்டியின் இருக்கை ஒன்றில் நாய் ஒன்று மிகவும் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருந்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற நெரிசல் நேரத்தில் மனிதர்களே உட்கார இடமின்றித் திணறும் போது, அந்த நாயை விரட்டிவிட்டு அமரவே பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அங்கிருந்த மும்பை பயணிகள் எவருமே அந்த நாயை எழுப்பவோ அல்லது விரட்டவோ முயலாமல், அது தொந்தரவு இல்லாமல் தூங்குவதற்காக அமைதியாக நின்றுகொண்டே தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். அந்த நாயின் அமைதியான உறக்கத்தைக் கெடுக்க விரும்பாத பயணிகளின் இந்த மாபெரும் கருணை உள்ளத்தைப் படம்பிடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் “அவசரமும் இயந்திரத் தனமும் நிறைந்த மும்பை மாநகர வாழ்க்கைக்குள்ளும் ஈடற்ற அன்புக்கும் கருணைக்கும் துளியும் பஞ்சமில்லை” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். விலங்குகளிடம் மனிதர்கள் காட்ட வேண்டிய இந்த அழகான பரிவை உலகிற்கு உணர்த்திய லோக்கல் ரயில் பயணிகளின் செயல், இணையத்தில் பெரும் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

“>