அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க்கில் உள்ள காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடந்த பிரச்சாரப் பேரணியில் பேசுகையில், “ஈரானை நாம் முற்றிலும் தோற்கடித்த பிறகு, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடும், அந்நாட்டு ஆட்சிக்கெதிரான மக்கள் எழுச்சியைத் தூண்டும் நோக்கத்துடனும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீதான போரைத் தொடங்கினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உலகளாவிய எரிசக்தி மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்திற்கான மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையின் பெரும்பகுதியை ஈரான் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது.
தற்போது ஈரான் பெரும்பாலான பயணிகள் கப்பல்களுக்கு அனுமதி மறுத்து வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக அமெரிக்க கடற்படை அந்நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. “நாங்கள் விரும்பினால் தவிர எந்தக் கப்பலும் உள்ளே செல்ல முடியாது” என்று டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இருப்பினும், அமெரிக்காவிற்கு வந்து குழந்தை பெற்றெடுக்கும் நோக்கில் விசா கோருபவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் புதிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
