திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், கட்சிப் பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் பல மூத்த நிர்வாகிகளின் மாவட்டச் செயலாளர் பதவிகளைப் பறிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​அதன்படி, 70 வயதைக் கடந்த மாவட்டச் செயலாளர்களுக்கு விலக்கு அளித்து, அந்தப் பொறுப்புகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகப் பதவி பறிக்கப்படும் இந்த மூத்த தலைவர்களுக்கு, தலைமைக் கழகத்தில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் போன்ற கவுரவப் பதவிகளை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

​இந்த 70 வயது வரையறை லிஸ்டில் எ.வ.வேலு, எஸ். ரகுபதி, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செஞ்சி கே.எஸ். மஸ்தான் உட்பட சுமார் 13 முக்கிய மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

​கட்சியில் இளைஞர்களுக்கும் புதிய முகங்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கும் வகையில், மாவட்டங்களைப் பிரித்து புதிய மா.செ.க்களை நியமிக்கவும், சீனியர்களுக்குத் தலைமைக் கழகத்தில் பொறுப்புகளை வழங்கி அவர்களை வழிநடத்த வைக்கவும் இந்த அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள திமுக தலைமைத் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.