கொல்கத்தா கெஸ்டோபூர் பகுதியில் புதிதாக வாங்கிய காரில் ஓட்டப் பழகிய 42 வயது பெண், எதிர்பாராதவிதமாக வாகனம் குளத்திற்குள் பாய்ந்ததால் உள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமித்ரா தாஸ் (42) என்ற கார்ப்பரேட் அதிகாரி, தனது மகளை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், தனது இரண்டு மாதங்களுக்கு முன்பு வாங்கிய புதிய காரை ஓட்டப் பழகும் நோக்கில், வீட்டின் அருகே இருந்த கேரேஜிலிருந்து வண்டியை வெளியே எடுக்க முயன்றுள்ளார். அப்போது பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் நேராக அருகில் இருந்த 10 முதல் 12 அடி ஆழமுள்ள குளத்திற்குள் பாய்ந்து மூழ்கியது..குளத்திற்குள் கார் மூழ்கியபோது ஏற்பட்ட மத்திய பூட்டுதல் அமைப்பு காரணமாகக் கதவுகளைத் திறக்க முடியாமல் அவர் உள்ளேயே சிக்கியுள்ளார். எப்படியாவது தப்பிக்க முயன்ற அவர், பின் இருக்கைக்கு நகர்ந்து விண்ட்ஷீல்டு மற்றும் ஜன்னல்களை உடைக்க முயன்றது தெரியவந்துள்ளது. அவரது உடல் பின் இருக்கையில் மூழ்கிய நிலையிலும், கால்கள் டிரைவர் சீட்டிலும் இருந்ததை மீட்டுக் கண்டறிந்தனர்.

தகவலறிந்து ஓடிவந்த உள்ளூர் மக்கள் குளத்தில் குதித்து மீட்க முயன்ற போதிலும் பலனில்லை. அதன்பின்னர் காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் வரவழைக்கப்பட்டு, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலான போராட்டத்திற்குப் பிறகே கார் தண்ணீரிலிருந்து வெளியே தூக்கப்பட்டது. அதற்குள் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தார். எதிர்வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஓட்டுநர் உரிமத் தேர்வுக்காக அவர் விண்ணப்பித்துத் தயாராகி வந்ததும், இதற்காகவே கடந்த சில நாட்களாக அவர் ஆர்வத்துடன் கார் ஓட்டப் பழகி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

 

திடீரென அரங்கேறிய இந்த கோர விபத்து சுமித்ரா தாஸின் குடும்பத்தினரையும், அக்கம் பக்கத்தினரையும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.