இந்திய ஐடி துறையில் சாதித்துக் காட்டியவர்களின் கதைகள் எப்போதும் இளம் தலைமுறையினருக்குப் பெரிய ஊக்கமாக அமையும். அந்த வகையில், சாதாரண ஒரு தொடக்கத்திலிருந்து கடின உழைப்பைக் கொண்டு சுமார் 11 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.2.2 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துள்ள ஒரு மென்பொருள் இன்ஜினியரின் பயணம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ரெடிட்தளத்தில் @SnooRabbits1275 என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால், அவர் எந்தவொரு பெரிய குடும்பப் பின்னணியிலிருந்தோ அல்லது நாட்டின் முன்னணி ஐஐடி போன்ற டாப் கல்லூரிகளிலிருந்தோ வந்தவர் அல்ல. கடந்த 2015ஆம் ஆண்டில் கணினி அறிவியலில் பி.டெக் முடித்த இவர், ஒரு சாதாரண சேவை மற்றும் கன்சல்டிங் நிறுவனத்தில்தான் தனது பணியைத் தொடங்கினார். அப்போது அவரது மாதச் சம்பளம் வெறும் ரூ.37,000 மட்டுமே. எனினும், அங்கு கிடைத்த நல்ல தொழில்நுட்பச் சூழல் அவருக்குத் தொழிலைக் கற்றுக்கொள்ளப் பெரிதும் உதவியது.

From 37K per month to 2.2 cr+ package after 11 years
byu/SnooRabbits1275 inIndian_flex

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து மாதச் சம்பளம் ரூ.1.1 லட்சமாக உயர்ந்தது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபேங்’ (FAANG) நிறுவனத்திற்கு மாறியபோது, அவரது ஆண்டுச் சம்பளம் ரூ.44 லட்சமாகப் பன்மடங்கு உயர்ந்தது.

எனினும், கோவிட் காலத்தில் ஏற்பட்ட கடுமையான பணிச்சுமை அவரது மனநலத்தைப் பாதித்ததால், 2020 நடுப்பகுதியில் எந்தப் புதிய வேலை வாய்ப்பும் கையில் இல்லாமல் திடீரெனத் தன் வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஒரு அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், மே 2022 இல் தனது சொந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி சி.டி.ஓ (CTO) பொறுப்பை ஏற்றார்.

தொடக்கத்தில்  அந்த நிறுவனம் நன்றாகச் செயல்பட்டாலும், உரிமம் (License) தொடர்பான சிக்கல்களாலும் இணை-நிறுவனர் விலகியதாலும் 2024 மார்ச்சில் பெரும் சவால்களைச் சந்தித்தது. இதனால் ஆகஸ்ட் 2024 இல் மீண்டும் வேலை தேடத் தொடங்கிய அவருக்கு, அக்டோபர் 2024 இல் ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ரூ.1.2 கோடி பேக்கேஜில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு பணிச்சூழல் சரியில்லாததால் வெறும் மூன்று மாதங்களிலேயே அதிலிருந்து வெளியேறினார்.

பின்னர் பிப்ரவரி 2025 இல் மீண்டும் ஒரு FAANG நிறுவனத்தில் இணைந்த அவருக்கு ஆரம்பத்தில் ரூ.1.5 கோடி வரை  சம்பளம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 2026 இல் கிடைத்த பதவி உயர்வு மற்றும் கூடுதல் பங்குகள்  மூலம் அவரது மொத்த ஆண்டுச் சம்பளம் தற்போது ரூ.2.2 கோடியைத் தாண்டியுள்ளது. எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாமல், தனது திறமையை மட்டுமே நம்பி 11 ஆண்டுகளில் டாப் கல்லூரி மாணவர்களுக்கு நிகராக இந்த உயரத்தை அடைந்துள்ளது தனக்குப் பெருமிதம் அளிப்பதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.