தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். குறிப்பாக வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை என்று அவர் விமர்சித்தார். குடும்பத் தலைவிகள் வீட்டு வரவு-செலவு திட்டத்தை எப்படி தயாரிப்பார்களோ, அதுபோல அரசும் மக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றும் சௌமியா அன்புமணி கூறினார். தமிழக பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, விவசாயிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார். “வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மருத்துவச் செலவு, பள்ளிக் கட்டணம் என பல்வேறு செலவுகளை கணக்கில் கொண்டுதான் குடும்பத் தலைவி பட்ஜெட் போடுவார். அதுபோல விவசாயிகளின் தேவைகளையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்ர். தாய்மாமன் சீர் முதலமைச்சரை கொடுத்துவிடுவார் ஆனால் அத்தை சீர் பாட்டி சீர் எல்லாம் நாம் தானே கொடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, தமிழகத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதற்காக ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுதல், ஏரி-குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். நிலத்தடி நீர்மட்டம் பல பகுதிகளில் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழகத்தில் அரசு வேலைக்கான போட்டி மிக அதிகரித்துள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளதால், இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக்கனியாக மாறி வருவதாக அவர் கூறினார். ஒப்பந்த முறையில் பணியிடங்களை நிரப்புவதற்குப் பதிலாக நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
