சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் தவெக மற்றும் திமுக இடையே அரசியல் கருத்து மோதல் ஏற்பட்டது. முன்னாள் முதலமைச்சர் மக்கள் மனதில் இல்லை என தவெக உறுப்பினர் ஒருவர் கூறியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த விவாதம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாதத்தின்போது பேசிய நேரு, தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டதால் மொத்த வெற்றி எண்ணிக்கையில் திமுக தரப்புக்கு அதிக இடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார். “நாங்கள் 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். கட்சிகளாகப் பிரிந்து இருந்தாலும், மொத்தமாக எங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம்” என அவர் தெரிவித்தார். இதற்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய நேரு, தவெக பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் குறித்தும் தனது கருத்தை முன்வைத்தார். மேலும், திமுக தலைவரும் திராவிடக் கொள்கைகளும் தொடர்ந்து மக்களிடம் இருப்பதாக அவர் கூறினார். அதனால்தான் தவெகவும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பற்றி பேசுவதாகவும் நேரு குறிப்பிட்டார். அவரது பேச்சுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களின் மூலம் திமுகவுக்கு மக்களிடையே ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான இந்தக் கருத்து மோதல் சட்டப்பேரவை விவாதத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.