உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குடியிருப்புப் பகுதியில் நடந்த நள்ளிரவுச் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரவில் நள்ளிரவு 11.06 மணியளவில், அண்மையில் உள்ள மற்றொரு டவரில் வசிக்கும் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, பாதுகாப்புக் காவலர் வந்து இவரை எழுப்பியுள்ளார். நோயாளிகளின் நிலைக்குத் தான் முழுமையாக இரக்கம் தெரிவித்தாலும், அனைத்து எல்லையையும் தாண்டி தனது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதைச் சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் வசிக்கும் குடியிருப்பு என்பது ஒரு தனிப்பட்ட இல்லமே தவிர, அது 24 மணி நேரமும் செயல்படும் அவசரச் சிகிச்சை பிரிவோ அல்லது மருத்துவமனையோ கிடையாது என்று அந்த மருத்துவர் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்தார். யாருக்கேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், நள்ளிரவில் மருத்துவர்களைத் தேடி வருவதற்குப் பதிலாக உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தனக்குத் துயரப்படுவோரின் மீது பரிதாபப்பட மட்டுமே இயலும் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மருத்துவரின் இந்த அதிரடியான கருத்து சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் இது கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளலாமா என ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், தனிப்பட்ட நபர்களின் ஓய்வு நேரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அவருக்கும் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது என்று கூறி மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.